Thursday, August 15, 2013

கோழி விழுங்கிய உலகு-


அரிசி புடைப்பது என்பது
மருவி வரும் கிராமிய கலைகளைப் போல
எங்கள் உம்மாக்களுக்கு மட்டுமே
அது இப்போது தெரியும்

வம்மிப் பழம் பூசி மெழுகிய
பிரம்பு சுளகிற்குள் அரிசை நிரப்பி
அதை லாவகமாக உதறி
சுளகின் முதுகில் உம்மா விரலால் தட்டுவா
அப்போது என் வீட்டு முற்றத்தில்
நெற்லும் புளகும் தனியாக விழும்
அதை பொறுக்கி உண்ண கோழிகளுக்குள்
பலத்த போட்டி நிலவும்

உம்மா ஒரு பழங் கதை சொன்னா
சிறு பிள்ளையாய் இருந்த போது
பக்கத்து பணக்காரர்கள் வீட்டுக்கு
மூத்தம்மாவோது தவுடு கொழிக்க
செல்வாராம்
குறு நெல்லரிசி சோறும்
கிட்டங்கி செப்பலி மீன்
குளம்பும் தின்ன
ஊர் ஏழைகளோடு போட்டி போட்டு
தவுடு கொழிச்சால்தான்
ஒரு குடும்பம் பசியாற
குரு நெல் சேர்க்க முடியுமாம்

உம்மா இன்னுமொரு கதையும் சொல்லுவா
கோழிகளுக்கு எதை தின்றாலும்
பசி தீராதாம்
இரவுகளில் உருண்டையான
கூளாங் கற்களை விழுங்கிவிட்டுத்தான்
உறங்கச் செல்லுமாம்

அப்போதெல்லாம் நினைத்ததுண்டு கோழிகள்
உருண்டையா பூமியைதான்
விழுங்கி கொள்கிறதா என்றுகோழிகளை போலதான்
நாகரீகமும் சில அழகான
கிராமிய பண்பாடுகளை
தின்று தின்று மலம் கழித்துவிட்டது

மூன்று கல் அடுப்பு
களி மண் அடுப்பு
மண் பானை குளிர்ந்த நீர் பற்றியெல்லாம்
நாங்கள் பள்ளிகளில் படித்தது போல
உமி
தவுடு
குளத்து மீன்கள்
சுளகு
கறு நெல் பற்றியெல்லாம்
பள்ளிகளில் மட்டும்தான்
படிக்க முடியும்

உம்மா எப்போதும் அரிசி புடைக்கும்
முற்றத்தை பார்க்கிறேன்
உம்மா அரிசி புடைக்க வருவதுமில்லை
கோழிகள் தீன் தின்ன
வருவதுமில்லை
கோழிகள் உலகை மட்டும்தான்
விழுங்கிக் கொள்கின்றன

கோழிகள் விழுங்கும் உலகில்தான்
நாமெல்லாம் வாழ்ந்து வருகின்றோம்

கோழிகளும் இப்போது
நாகரீக குப்பைகளை மட்டும்தான்
'சீய்க்கின்றன'

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment