Thursday, August 15, 2013

மழைக் குழந்தைகள்----------------------


மழை
குழந்தைகளை நனைக்கும் போதெல்லாம்
மழலையாகிவிடுகின்றது
பிஞ்சு விரல்களால்
'கிள்ளி நொள்ளி பிராண்டி'
விளையாடுகின்றது
முதல் மண் வாசம் கமழும்
மணல் நிரம்ப
'அ ஆ' எழுதுகின்றது

மழைச் சேற்றை
முகம் நிரம்ப அள்ளிப் பூசி
மழையோடு சிரிக்கிறாள்
அந்தச் சிறுமி
மழை விரல்களை தழுவி
ஆசையாய் முத்தம் கொடுக்கிறாள்

மழை
அநாதை குழந்தைக்கு
அம்மாவாகிறது
முந்தானையால் முகம் துடைக்கிறது

இந்தச் சிறுமி
எப்போதாவது வரும்
மழை அம்மாவின் கைகளால்தான்
திருப்தியாக தீத்து சோறு உண்கிறாள்

மழை அம்மா எப்போதாவது கொண்டு வரும்
கைப் பாவையோடுதான் ஆசையாய்
விளையாடிக் கொள்கிறாள்

அநாதை குழந்தைகளுக்கு
எத்தனையோ அன்பான
அம்மாக்கள் கிடைப்பதைப் போல
மழைக்கும் இருக்கிறது
எத்தனையோ அன்பான குழந்தைகள்

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment