Saturday, August 10, 2013

90களின் பின் அந்தி

90களின் பின் அந்தி

இந்தச் சம்பவம் நடக்கும் போது எனக்கு 9 வயது மஃரிப் தொழுகைக்காக அதான் ஒலிக்க ஆரம்பித்த போது நாங்கள் எங்கள் வீட்டுக்கு சற்று தள்ளியிருக்கும் தெருவோர பாள் வளவில் கிரிக்கட் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம் பிரதான வீதியை கடப்பதற்குள் இரண்டு துப்பாக்கி வெடி சப்தங்கள் கேட்டது அச்சத்தோடு திரும்பிப் பார்க்கிறேன் ஜஃபர் மச்சான் பின் மண்டையில் கைகளை கட்டிக் கொண்டு தரையில் சாய்ந்து கொண்டிருந்தார் எப்போதும் அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் தெருவோர மஞ்சோண்ணா மர நிழலிலேயே அவருடைய மரணமும் ரத்தத்தால் எழுதப்பட்டது சுட்டவர்கள் இரண்டு பேரும் இருபத்து மூன்று வயதிற்கும் குள்ளமாக இருந்தார்கள் முகம் ஞாபகத்தில் இல்லை சரம் உடுத்திருந்தார்கள் ஏ கே 47 துப்பாக்கியை அந்த சரத்தினுள்தான் மறைத்துக் கொண்டார்கள் இத்தனைக்கும் அவர்கள் இரண்டு பேரும் அதிக நேரமாய் அவருடன்தான் பேசிக் கொண்டும் வழக்கமாய் தெரு ஓர கட்டில் இளந்தாரிகள் மாபிள் விளையாடும் இடத்தில் மச்சானுடன்விளையாடிக் கொண்டும்தான் இருந்தார்கள் மச்சானை சுட்டுவிட்டு அவர்கள் இரண்டு பேரும் புஷ் பைக்கில்தான் இதே தெருவில் சென்று அடிச்சாண்ட வட்டை கட்டால் வேகமாக சென்று மறைந்தார்கள் ஊர் மக்கள் அவர்கள் சென்று சேரும் வரை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் 90.களின் மறாத பின் அந்ததி அது


90களின் பின் அந்தி -



ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்

90களின் பின் அந்தியா இது

அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்

ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்

முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்

90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களி
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்

ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை
'நீல' வானத்தில் பறவைகளின் சஞ்சாரம் அறவே இல்லை

பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது

1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்

அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது

பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment