Thursday, August 15, 2013

உன் இரு விழிகள்-



கூர்ந்து பார்க்கிறேன்

கடல் வெளியில்
தாழப்பறக்கும்
கரும் பஞ்சுரோம குருவிகளின்
ஏக்கம் தழும்பும் விழிகளை

வரிக் குதிரைகளின் குழம்படியில்
முளைத்து கிடக்கும் வெள்ளிகளை

பெருங்கடலின் ஈர மேனியில்
கீலம் கீலமாய் சிதறிக் கிடக்கும்
நிலா வெளிச்சங்களை

கீறிக்கொண்டே இருக்கிறாய்
தாழிட்டு அடைக்கப்பட்ட
அழுக்கு காவியேறிய கூதல் கண்ணாடியில்
பெளர்ணமியை மறந்து
இருளில் மூழ்கிய
இவ் ஆற்றைப் பற்றி

நான் அழைக்கிறேன்
புதை குழிக்குள் உதிர்ந்து
கிடக்கும்
சருகுகளை மிதித்துக் கொண்டே
நடக்கிறாய் நீ

எரி நட்சத்திரங்கள்
குதித்து விழும் பாழ் நிலங்களில்
என்னுடைய கறுத்த நிழலை
உன்னுடனே அழைத்து போகிறாய் நீ

அழிந்து போன பழ
தோட்டங்களை அழகுபடுத்திக் கொண்டே
இருக்கிறாய் நீ

ஒவ்வொரு அறைகளையும்
கடந்து வருகிறேன்
இரண்டாவது சித்திரக் கூடத்தில்
விரல் இடுக்குகளில்
முகம் புதைத்திருக்கும்
நவீன ஓவியம் ஒன்றில்
துயரோடு அழுது கொண்டிருக்கிறது
உன் இரு விழிகள்

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment