Thursday, August 15, 2013

கல் எறிந்த குளம்-

கல் எறிந்த குளம்-


கல் எறிந்த குளத்தில்
சிறு சலனம் கூட இல்லை
சிந்திக்க ஆரம்பிக்கிறேன்
இவை கற்களா
இது குளம்தானா
இது கனவா
இல்லை இடது பக்கமாக
துணிகளுக்குள் மறைந்து துடிக்கும்
கருங் கற்களை போல
உயிர்ப்பில்லாதவையா

எந்த வித அசைவுகளும் இல்லாமல்
என் நிழலை குவளையில் ஏந்திய படி
விரிகிறது வெய்யில் ஊறிய பாதை

சில சொற்கள் சுடு கோப்பையில் தளும்பின
சில சொற்கள் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தன

நடை வண்டியில் நடை பழக்கிய தாயை
விரல் பிடித்து மிகவும் எச்சரிக்கையோடு
முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்லும்
ஒருவனிடத்தில் கவிந்து கிடக்கும்
மெளனத்தைப் போல
எந்த சொற்களிலுமே
அர்த்தம் இருந்ததில்லை

புன்னகைப்பதற்கே ஐயுறுகிறேன்
ஒரு சிறு புன்னகையின் முடிவிடத்தில்
ஒரு சோகத்திற்கான கதவு
திறக்கப்படலாம்


-ஸமான்

No comments:

Post a Comment