Wednesday, September 11, 2013

என் முற்றத்து மாமரத்தின் கதை-

என் முற்றத்து மாமரத்தின் கதை-

என் முற்றத்தில் ஒரு மாமரம் நின்றது அதற்கும் எனக்கும் ஒரு ஒரே வயது விளையாட்டு பருவம் தொடங்கி பள்ளி காலத்து வீட்டு வேலைகள் வரை நிறையவே அனுபவித்துவிட்டேன் அந்த மாமர நிழலில் மதிய நேரங்களில் வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள் எனக்கு உறங்க பிடிப்பதில்லை கதிரையோடு வீட்டினுள் இருந்து மாமர நிழலுக்கு வந்து விடுவேன் அதிகமான என் கவிதைகள் இந்த மாமோர நிழலில்தான் உருவாகியது இன்னும் ஒன்று தெரியுமா அந்த மாமரத்தை என் ஒன்று விட்ட சகோதரி நட்டுவிட்டு வெளி நாட்டுக்கு பணிப் பெண்ணாக செல்லும் போது நான் உம்மாவின் வயிற்றில் இருந்தேனாம் பின் நாளில் அக்க என் புகைப்படத்தை கேட்டபோது இதே மாமோரத்தின் சிறிய கன்றின் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பினார்கள் இன்று காலை என் புகைப்படத்தை காட்டும் போது அந்த மாமரத்தை நான் பார்த்தேன் இருபது வருடங்களுக்கு முன் எடுத்த என் புகைப்படத்தை அக்கா சேமித்து வைத்திருப்பதற்கு சிறிய கன்றாக இருக்கும் இந்த மாமரம் கூட காரணமாக இருக்கலாம்

காலை நேரங்களில் பனி விலகும் முன்பு மாமரத்தின் கீழ் அமர்ந்து தேநீர் அருந்துவேன் இன்றைய நாட்களில் கூட அது தொடர்ந்தது நான் அதிகமாக புத்தகம் வாசித்ததும் அதன் நிழலில் அமர்ந்துதான் எனக்கு தெரிந்த மன நலம் பாதிக்கப்பட்ட அக்கா சில நேரங்களில் என் வீட்டுக்கு வந்தால் நிலத்தில் சிதறிக்கிடக்கும் அணில் கொறித்த மாம் பழத்தை எடுத்து சுவைத்தபடியே மாமர நிழலில் அமர்ந்திருப்பார் நாங்கள் யாரும் அவரை தொந்தரவு செய்வதில்லை என் சிறு பிராயம் முதல் எனக்கு பிடித்தமான இடங்களுள் இந்த மாமர நிழல்தான் முதல் இடம் வகித்தது சிறிது நாட்களால் எங்கள் வீட்டு முற்றத்து மாமரத்திற்கு மரங் கொத்தி ஒன்று வரும் அது கொத்தி கொத்தி எழுப்பும் சப்தத்தில் எழுந்து பழக்கமாகி விட்டது இன்று அதிகாலை எழுந்ததும் மரங் கொத்தியின் கொத்தல் சப்தத்திற்காய் நிறைய நேரம் காத்திருந்தேன் அதுதான் தறிக்கப்பட்டுவிட்டதே என்ற ஞாபகம் வந்த போது நானே தறிக்கப்பட்டதைப் போல மனசு சுள் என வலித்தது

என்னோடு நடப்பட்ட மரம் களிசன் பருவத்தில் எனக்கும் நண்பர்களுக்கும் கேனி தந்த மரம் அணிலையும் மரங் கொத்தியையும் அறி முகம் செய்த மரம் ஒரு சோதரியை போல ஒரு சகோதரனை போல என் தனிமையைப் போக்கி மன சலனங்களை நீக்கி குளிர் காற்றால் தலை தடவிய எனது மரம் நண்பனின் முதல் அறிமுகம் நிகழ்ந்த மரம் நிறைய கோப தாபங்களைப் பார்த்த மரம் நானும் நண்பர்களும் பொம்மை விளையாடுவதில் தொடங்கி மண் சோறாக்கி விளையாடுவது கடந்து கிரிகட் ஆடும் பருவங்ளில் எல்லாம் எனக்கு இடம் கொடுத்த மரம் பின் நாட்களில் எங்கள் சொந்தக்கார சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு திடலாக இருந்தது இன்று அவர்கள் விளையாட வரும் போது அவர்களுக்கான அந்த நிழல் இனி இருக்கப் போவதில்லை ஏக்கத்தோடு அவர்கள் திரும்பிச் செல்வதை பார்க்க வேண்டி இருக்கும் வாப்பாவும் மற்றவர்களும் அவர்களுடைய சைகிள்களையும் மோட்டார் சைகிள்களையும் எங்கு நிறுத்துவார்கள் மாலை வேளையில் மாமரத்தில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் உம்மாவின் மடிக்குள் அமர்ந்து பார்த்து மகிழ்ந்த வானத்து காகங்களும் மேகங்களும் என் முற்றத்து மாமரத்தை தேடியிருக்குமா ?

-ஜெம்சித் ஸமான்

Monday, September 2, 2013

புத்தனும் போதி மரமும்-


விழி புடைத்த கருங் கல்லின்
பின் ஒளி வட்டப் பாதையில்
நிழல் தின்று முளைத்திருக்கிறது
பெரு மரம்
உள் உளுத்த அதன் கிளைகளில்
இரத்த பிசு பசுப்போடு
கொழுவப்பட்டிருக்கிறது
என் இனத்தின் வள வளப்பான
முதுகு தோல்களை உரித்து களைத்த சாட்டைகள்

தியானப் புதரில் அவிழ்த்து எறியப்பட்ட
அழுக்கு காவி ஏறிய ஆடைகள்
நிலம் தின்று முளைத்தன

பெளர்ணமி தின பிரார்த்தனை தட்டுகளில்
வெள்ளை மலர்களுக்கு பதிலாக
என் இனத்தின் முதுகு தோல் உரித்த
இரத்த துளிகளை ஏந்திச் செல்கிறார்கள்
அவர்கள் காலடில் படும் இடம் எல்லாம்
கமழ்ந்தெழுகிறது துவேசப் புழுதிகள்
முதல் மழையில் கமர்த மண் வாசனையை
மறந்தவர்களல்ல நாங்கள்

கண்ணுறுகிறேன்
நான் நடைவண்டில் உருட்டிய நிலங்களில்
மசிந்து கடக்கும் மண்டை ஓடுகளையும்
விழி புடைத்த கருங் கல் சிலைகளையும்
இருதய வடிவ இலைகள்
உதிர்ந்து கிடக்கும் இடமெல்லாம்
அவர்களுடையது
எங்கள் பிறப்பு சான்றிதள்கள்
குப்பை தொட்டியில் கசக்கி எறியப்பட்டது

தேட ஆரம்பித்திருக்கிறேன்
எங்களுடைய நிலத்தையும்
பனிப் புகாரின் பின் இருட்டில்
கூடி விளையாடும்
அவர்களுடைய குழந்தைகளிடம்
நிறைந்து கிடக்கும் ஏதோ ஒன்றையும்

மழை விகாரையில் பெய்தால் மட்டும்தான்
புனிதமா..?
போதிமரத்தை வெட்டிக்
கொண்டிருக்கிறான்
புத்தன்
அதன் ஒரு கிளையை
இங்கேயும்
நட்டு வையுங்கள்
துளிர்க்கும் அதன் கிளைகளில்
புத்தனின் கண்ணீரை காண்பீர்கள்

- ஜெம்சித் ஸமான்

Saturday, August 31, 2013

காலி கோக் ரின்கள்-அருந்தி முடித்த காலி கோக் ரின்களை
நசித்து எறிவதும்
மிச்சம் மீதி துளிகளில்
காற்று சிலிர்ப்பதும்
வேண்டும் என்றே கால்களால் அதை உதைத்து கொண்டு
தெருவில் நடப்பதும்
விருப்பமுடையதாய் இருக்கிறது

கோக் ரின் காற்றில் எழும்பி
விர்ர்ர்ர் என்று பறந்து
தெருவில் டங்ங்ங்ங் என்று வீழும் போது

திரும்பி பார்க்கும் மனிதர்களும்
வெருண்டோடும் நாய்களும்
கும் என்று பறக்கும்
பறவைகளும்
இரவை தன் வெறுமைக்குள்
நிரப்பிக் கொள்வதும் என
இந் நிகழ்வுகள் நகரத்தின் சாலைகளில்
சர்வ சாதாரணமானவை

வெறிச்சோடிய தெருவில்
இரவை தன் வெறுமைக்குள்
நிரப்பிக் கொள்ளும்
காலி கோக் ரின்கள் என் கனவிலும்
உருள்கின்றன

இரவில் வீழும் விர்ர்ர்ர் டங்ங்ங்ங் சப்தங்கள்
ஆழ் கடலின் அமைதியில் கவிந்து அழிகின்றன

-ஜெம்சித் ஸமான்

Tuesday, August 27, 2013

் கண்களுக்குள்ளிருந்து குதித்தது கடல

ஈனச் சொல் ஒன்றை
உதட்டிலிருந்து களற்றி எறிந்துவிட்டு
இரவுக்குள் புகுந்து
மறைந்துவிட்டான்
அந்த ஈனச் சொல்
தன் விஷப் பற்களால்
பூமியை கொத்திய போது
சுருண்டு கிடந்த சோம்பேறிக் கடல்
கண்களுக்குள்ளிருந்து குதித்தது

-Zaman

இழந்து போன காடு-


காடு மழையை
தொலைத்திருந்தது
கதவை திறந்து
வெளியே வந்தது நீல மேகம்
அதற்குள்
வரட்சியின்
இரண்டு கண்களைக் கண்டேன்
நேற்று வாசித்த நாவலில்
இதே அத்துவானக் காட்டில்
துள்ளி விளையாடிய
இரண்டு மான் குட்டிகளும்
கண்கள் இன்றி
இறந்து கிடந்தன
உறு புலியின் தீராப் பசி
மான்களின் கண்களாகி
பார்த்து பார்த்து அழுதது
இழந்து போன காட்டை

-ஸமான்

வாழ்வு
நிலம் வளர்ந்து
மலைகள் அழுதது
அசைவிழந்த ஓவியத்தில்
பின் ஒரு இரவில்
அதன புன்னகைத்துக் கொண்டிருந்தது
ஒவ்வொரு நொடி இழப்பிலும்
ஒவ்வொரு புது வாழ்க்கை என்பது
மலைகளுக்குப்
புதிதில்லைதானே

-ஸமான்

Monday, August 26, 2013

சிறகு முளைத்த சூரியன்-


நான் ஒரு சூரியனை வரைந்து கண்ணாடியிடம் காட்டிய போது கைகளை திருகி பறித்துக் கொண்டது எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அது தரவேயில்லை சிவப்பு நிற சூரியனை காண நேரும் போதெல்லாம் பழைய ஞாபகத்தில் மழை பெய்து ஆறுகள் பெருக்கெடுத்து கண்களுக்குள் ஓடுவதாக பொய் காரணம் கூறி கண்ணாடிக்குள்தான் எங்கோ ஒழித்து வைத்திருக்கிறது நாளை அந்த சூரியனை காட்சிப் படுத்த வேண்டும் ஆசை மிகுதியால் கண்ணாடியை உடைத்து விட்டு சிதறிக்கிடந்த எத்தனையோ 'நான்'களுக்குள்ளிருந்து சூரியனை எடுத்த போது சூரியனுக்கு இரண்டு இறகுகள் முளைத்திருந்தன -ஜெம்சித் ஸமான்