Wednesday, August 7, 2013

அவரின் மீசான் கட்டைகளை மண் மூடியிருக்கும்-


எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது
என் சகோதரன்
ஊர் காவல் படையில் சேர்ந்தார்

எனக்கு முதலில் சிவப்பு பேனாவும்
எழுத்து கொப்பியும் வாங்கித் தந்தது
அவர்தான்

பேனா பிடித்து அ,ஆ எழுதி காட்டியதும்
அவர்தான்
கடைசியாக அவர் முத்தமிட்டது
என்னைத்தான்

மீலாத்துன் நபி விழாக்கு
அடுத்த நாள்
சேனைக் குடியிருப்பு
உள் வீதி ஒன்றில்
உள்ளாடையோடு சுடப்பட்டு கிடந்தார்

அவருடைய மீசான் கட்டைகளை
மண் மூடியிருக்கும்
அடையாளம் காண முடியாமல்
பற்றைகள் வளர்ந்திருக்கும்
1995 அவர் இறந்த நாளிலிருந்து
அவருடைய தாய் அழுத கண்ணீரில்
அழியாமல் இருக்கிறது அவருடைய ஞாபகம்
எங்கள் வளவு மண் நிரம்ப
சிவப்பு பேனைகளை
பார்க்கும் போதெல்லாம்
விம்மி வரும் அழுகையை
அடக்கி கொள்கிறேன்

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment