Thursday, August 15, 2013

தெருவை கடக்கும் மழை-

தெருவை கடக்கும் மழை-


சிறு மழை
கை பிடி வரிசைகளை போல நீளமாயும்
குறுக்கலாயும் பாதைகள்
பெயர்வின் பின் விரிந்து கிடக்கும்
வெறுமை காவிய பெரு நிலங்களில்
இப்போதும் எவரையோ
தேடிக்கொண்டிருக்கிறது
நிலா

துயர் கவிந்து சுருள்கிறது
என் தெருக்கள்

ஒரு வெள்ளை புறா மின் கம்பத்தில்
யார் வருகைக்காகவோ காத்திருக்கிறது

தெருவில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களிலும் சருகுகளிலும்
மீதித்திருக்கிறது
நேற்றின் விழிகளில் சொட்டிய
ஒரு சுறங்கை ஈரம்

பூனை உறங்கும் அடுப்பங் கரையில்
பசித்திருக்கிறாள் ஒருத்தி

தெருவில் கடந்து செல்லும்
ஆடை வியாபாரியை கடந்து செல்கிறாள்
கிழிசல் ஆடை உடுத்திய வேறு ஒருத்தி

பொம்மை வியாபாரியின் கால் தடங்களில்
மசிந்து கொண்டே இருக்கிறது
ஒரு சிறுமியின் ஏக்கம் காவிய விழிகள்

எல்லோரையும் நனைத்தபடி
தெருவை கடக்கிறது
ஒரு சிறு மழை

-ஸமான்

No comments:

Post a Comment