Wednesday, August 7, 2013

பூ குடித்து இறந்த வண்ணத்தி



துயின்று எழுந்த பின் இரா பொடு பொடுத்த மழை
சுவர் பூக் கல் வழி ஊடுருவும் குமிழ் வெளிச்சம் நிலவை தின்றது

இருட்டு கெளவிய அறையில் என்னோடு அதுவாகி வசித்துவிட்ட
கைப் பாவைகள் இரங்கியது எனக்காக
உணர்வு இழந்த அதன் விழியில்
புத் உறை பிரித்த
ரத்த வாசம் பிசு பிசுத்தது முதல் குருதி துளி கசிந்து வடிந்து
சொட்டியது பூ மீது
பூ குடித்து இறந்தது வண்ணத்தி

கழுவி நீக்கப்படாத வியர்வை வாசம் கமழும்
உன் ஆடை தோயந்த அன்பு விறைக்கும் குளிர் நடுங்கி உடுத்திய புது ஆடைகளில் துளி கூட இல்லை

நீ நீயாக இல்லை
பொம்மைகள் இல்லாத நவீன அறையில்
என்னை கை பாவை ஆக்கினாய் நீ உருட்டி விளையாடி
உடைத்தாய் என்னை

தலை வேறு
கை வேறு
கால் வேறாக
அறை முழுவதும் நிறைந்து கிடந்தேன்

தாழ் இட்டு அடைத்த கதவின் பின்
நான் உரத்து அழும் தொனி
உன் செவிப்பறைகளை உசுப்பவில்லை

வெறுத்து மூடிய கதவுகளை திறக்க நினைப்பது
என் தவறுதான்

அறுகம் புல் தின்ற பூனை ஆகி கக்கி வைக்கிறாய் இரண தட்டு நிரம்ப
வெறுப்பு வார்த்தைகளை

பசி கூடி இறக்கிறேன் நிமிஷங்கள் விஷமாகி
நெஞ்சுக் குழி அடைத்த நஞ்சு ஆகிறது

கொடி விரித்த துணியின்
இறுதி ஈர சொட்டுகளாய் உலரவே காத்திருக்கிறது கடைசி இரங்கல்களும் இப்போதும் கேட்கிறது மலைகளின் அந்தப் பக்கம் கைவிடப்பட்டு சென்ற
ஆழ் மன குழந்தையின்
ஓயாத பீறிடல்


- ஸமான்

No comments:

Post a Comment