Thursday, August 15, 2013

அக்காக்கள் இல்லாத வீடுகள் அழகாய் இருப்பதில்லை-


அக்கா தரும் தேநீரும்
அம்மா தரும் தேநீரும்
ஒன்று போலவே இருக்கும் என்று
என் சிநேகிதன் அடிக்கடி சொல்வான்
உண்மைதான்
அம்மாக்கள் இல்லாத வீடுகளைப் போல
அக்காக்கள் இல்லாத வீடுகளும்
அழகாய் இருப்பதில்லை

அக்காக்கள் எல்லோரும்
அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்

அக்காக்கள் இருக்கும் தம்பிகள்
ரகசியங்களை வேறு யாருடனும்
பகிர்ந்து கொள்வதில்லை

தம்பிகளின் முதல் பெண் தோழிகளாக
அக்காக்களே இருக்கிறார்கள்

சிறு வயதில்
அம்மாவின் முந்தானையில்
முகம் துடைத்துக் கொள்ளும்
தம்பிகள் பதின் பருவங்களில்
முகம் துடைக்க
அக்காவின் துப்பட்டாக்களையே
தேடுகின்றார்கள்
அக்காக்களின் மடிகளிலேயே
தலை வைத்து உறங்குகிறார்கள்

அதைத்தான் அக்காக்களும்
விரும்புகின்றார்கள்

அம்மாக்களுக்கு அடுத்ததாய்
தம்பிகளுக்கு கிடைக்கும்
அன்பான உலகம் அக்காக்கள்தான்
அக்காக்களை அம்மாவை போல்
நினைத்துக் கொள்ளும் தம்பிகளுக்கு ஏனோ..?
அம்மாக்களை அக்காக்களாய்
நினைக்க முடிவதில்லை

தம்பிகளுடனான செல்ல சண்டைகளை
அக்காக்கள் விரும்புகின்றார்கள்
தம்பிகள் கோபப்படும் போது
தலை தடவி புன்னகைக்கிறார்கள்

அக்காக்களை தவிர தம்பிகள்
வேறு யாருடனும்
உரிமையோடு சண்டை இடுவதில்லை

கணவனைத் தவிர
அக்கக்கள் அன்போடு முத்தமிடுவது
தம்பிகளை மட்டும்தான்

தம்பிகள் தன் காதலி பற்றி
முதலில் சொல்வது அக்காக்களிடம்தான்

அப்பாக்கள் தம்பிகளை திட்டும் போதல்லாம்
அக்காக்களே பரிந்து பேசுகின்றார்கள்

சாக்லேட்டோ
கொய்யாக் கனிகளோ
பாதி கடித்த பின்
தம்பிளுக்கு என்று பத்திரப்படுத்துவது
அக்காக்கள் மட்டும்தான்

தம்பிகளுக்கு கொடுப்பதற்கென்றே
அக்காக்கள் ரகசியமாக
பணம் சேமிக்கிறார்கள்

அம்மாக்கு வாங்கி தரும் சேலைகளை போலதான்
அக்காக்களுக்கு தம்பிகள் வாங்கித்தரும்
மலிவான சுடிதார்களும்
உயர்வானவைதான்

திரு மணம் முடித்த பின்
அக்காக்கள் கணவனுக்காக
வாழ பழகிக் கொள்கிறார்கள்
அதன் பின் தம்பிகள் மீதான
அன்பை வெளிப்படையாக
காட்ட முடிவதில்லை அவர்களால்

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment