Monday, September 2, 2013

புத்தனும் போதி மரமும்-


விழி புடைத்த கருங் கல்லின்
பின் ஒளி வட்டப் பாதையில்
நிழல் தின்று முளைத்திருக்கிறது
பெரு மரம்
உள் உளுத்த அதன் கிளைகளில்
இரத்த பிசு பசுப்போடு
கொழுவப்பட்டிருக்கிறது
என் இனத்தின் வள வளப்பான
முதுகு தோல்களை உரித்து களைத்த சாட்டைகள்

தியானப் புதரில் அவிழ்த்து எறியப்பட்ட
அழுக்கு காவி ஏறிய ஆடைகள்
நிலம் தின்று முளைத்தன

பெளர்ணமி தின பிரார்த்தனை தட்டுகளில்
வெள்ளை மலர்களுக்கு பதிலாக
என் இனத்தின் முதுகு தோல் உரித்த
இரத்த துளிகளை ஏந்திச் செல்கிறார்கள்
அவர்கள் காலடில் படும் இடம் எல்லாம்
கமழ்ந்தெழுகிறது துவேசப் புழுதிகள்
முதல் மழையில் கமர்த மண் வாசனையை
மறந்தவர்களல்ல நாங்கள்

கண்ணுறுகிறேன்
நான் நடைவண்டில் உருட்டிய நிலங்களில்
மசிந்து கடக்கும் மண்டை ஓடுகளையும்
விழி புடைத்த கருங் கல் சிலைகளையும்
இருதய வடிவ இலைகள்
உதிர்ந்து கிடக்கும் இடமெல்லாம்
அவர்களுடையது
எங்கள் பிறப்பு சான்றிதள்கள்
குப்பை தொட்டியில் கசக்கி எறியப்பட்டது

தேட ஆரம்பித்திருக்கிறேன்
எங்களுடைய நிலத்தையும்
பனிப் புகாரின் பின் இருட்டில்
கூடி விளையாடும்
அவர்களுடைய குழந்தைகளிடம்
நிறைந்து கிடக்கும் ஏதோ ஒன்றையும்

மழை விகாரையில் பெய்தால் மட்டும்தான்
புனிதமா..?
போதிமரத்தை வெட்டிக்
கொண்டிருக்கிறான்
புத்தன்
அதன் ஒரு கிளையை
இங்கேயும்
நட்டு வையுங்கள்
துளிர்க்கும் அதன் கிளைகளில்
புத்தனின் கண்ணீரை காண்பீர்கள்

- ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment