Wednesday, September 11, 2013

என் முற்றத்து மாமரத்தின் கதை-

என் முற்றத்து மாமரத்தின் கதை-

என் முற்றத்தில் ஒரு மாமரம் நின்றது அதற்கும் எனக்கும் ஒரு ஒரே வயது விளையாட்டு பருவம் தொடங்கி பள்ளி காலத்து வீட்டு வேலைகள் வரை நிறையவே அனுபவித்துவிட்டேன் அந்த மாமர நிழலில் மதிய நேரங்களில் வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள் எனக்கு உறங்க பிடிப்பதில்லை கதிரையோடு வீட்டினுள் இருந்து மாமர நிழலுக்கு வந்து விடுவேன் அதிகமான என் கவிதைகள் இந்த மாமோர நிழலில்தான் உருவாகியது இன்னும் ஒன்று தெரியுமா அந்த மாமரத்தை என் ஒன்று விட்ட சகோதரி நட்டுவிட்டு வெளி நாட்டுக்கு பணிப் பெண்ணாக செல்லும் போது நான் உம்மாவின் வயிற்றில் இருந்தேனாம் பின் நாளில் அக்க என் புகைப்படத்தை கேட்டபோது இதே மாமோரத்தின் சிறிய கன்றின் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பினார்கள் இன்று காலை என் புகைப்படத்தை காட்டும் போது அந்த மாமரத்தை நான் பார்த்தேன் இருபது வருடங்களுக்கு முன் எடுத்த என் புகைப்படத்தை அக்கா சேமித்து வைத்திருப்பதற்கு சிறிய கன்றாக இருக்கும் இந்த மாமரம் கூட காரணமாக இருக்கலாம்

காலை நேரங்களில் பனி விலகும் முன்பு மாமரத்தின் கீழ் அமர்ந்து தேநீர் அருந்துவேன் இன்றைய நாட்களில் கூட அது தொடர்ந்தது நான் அதிகமாக புத்தகம் வாசித்ததும் அதன் நிழலில் அமர்ந்துதான் எனக்கு தெரிந்த மன நலம் பாதிக்கப்பட்ட அக்கா சில நேரங்களில் என் வீட்டுக்கு வந்தால் நிலத்தில் சிதறிக்கிடக்கும் அணில் கொறித்த மாம் பழத்தை எடுத்து சுவைத்தபடியே மாமர நிழலில் அமர்ந்திருப்பார் நாங்கள் யாரும் அவரை தொந்தரவு செய்வதில்லை என் சிறு பிராயம் முதல் எனக்கு பிடித்தமான இடங்களுள் இந்த மாமர நிழல்தான் முதல் இடம் வகித்தது சிறிது நாட்களால் எங்கள் வீட்டு முற்றத்து மாமரத்திற்கு மரங் கொத்தி ஒன்று வரும் அது கொத்தி கொத்தி எழுப்பும் சப்தத்தில் எழுந்து பழக்கமாகி விட்டது இன்று அதிகாலை எழுந்ததும் மரங் கொத்தியின் கொத்தல் சப்தத்திற்காய் நிறைய நேரம் காத்திருந்தேன் அதுதான் தறிக்கப்பட்டுவிட்டதே என்ற ஞாபகம் வந்த போது நானே தறிக்கப்பட்டதைப் போல மனசு சுள் என வலித்தது

என்னோடு நடப்பட்ட மரம் களிசன் பருவத்தில் எனக்கும் நண்பர்களுக்கும் கேனி தந்த மரம் அணிலையும் மரங் கொத்தியையும் அறி முகம் செய்த மரம் ஒரு சோதரியை போல ஒரு சகோதரனை போல என் தனிமையைப் போக்கி மன சலனங்களை நீக்கி குளிர் காற்றால் தலை தடவிய எனது மரம் நண்பனின் முதல் அறிமுகம் நிகழ்ந்த மரம் நிறைய கோப தாபங்களைப் பார்த்த மரம் நானும் நண்பர்களும் பொம்மை விளையாடுவதில் தொடங்கி மண் சோறாக்கி விளையாடுவது கடந்து கிரிகட் ஆடும் பருவங்ளில் எல்லாம் எனக்கு இடம் கொடுத்த மரம் பின் நாட்களில் எங்கள் சொந்தக்கார சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு திடலாக இருந்தது இன்று அவர்கள் விளையாட வரும் போது அவர்களுக்கான அந்த நிழல் இனி இருக்கப் போவதில்லை ஏக்கத்தோடு அவர்கள் திரும்பிச் செல்வதை பார்க்க வேண்டி இருக்கும் வாப்பாவும் மற்றவர்களும் அவர்களுடைய சைகிள்களையும் மோட்டார் சைகிள்களையும் எங்கு நிறுத்துவார்கள் மாலை வேளையில் மாமரத்தில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் உம்மாவின் மடிக்குள் அமர்ந்து பார்த்து மகிழ்ந்த வானத்து காகங்களும் மேகங்களும் என் முற்றத்து மாமரத்தை தேடியிருக்குமா ?

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment